tamilnadu

img

குழந்தைமை கொல்லும் கல்விக்கொள்கை -ச.தமிழ்ச்செல்வன்

“குட்டித் தலையணை, குட்டிப் போர்வை,
குட்டி டம்ளர் மற்றும்
குட்டிக் கொட்டாவியுடன்
குழந்தைகள் உருவாக்குகிறார்கள்
ஒரு குட்டி உலகத்தை,
அதில் பெற்றோர்களின் பெரிய விரல்களுக்கு
குட்டிக் கவளங்களைச் செய்யும்
பயிற்சியைத் தருகிறார்கள்”
                                                                                         - கவிஞர் முகுந்த் நாகராஜன்

இப்படியான சின்ன உலகத்துக்குள் ஆனந்தமாக வாழும் குழந்தைகளை 3 வயதிலேயே “முறைசார்ந்த கல்விப்புல ”த்துக்குள் கழுத்தைப் பிடித்துத் தள்ளிப் பெரும் பெரும் கவளங்களை அவர்கள் வாயில் திணிக்கும் திட்டத்துடன் முன் வைக்கப்பட்டுள்ளதுதான் திரு. கஸ்தூரிரங்கன் தலைமை யிலான குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள தேசிய கல்விக்கொள்கை-2019 வரைவு. தின்ன முடியாததைத் திணித்தால் குழந்தைகள் சாப்பாடே வேண்டாம் என்று ஓடி விடுவார்கள்தானே. அது தான் மத்திய அரசுக்கு இன்று தேவையாக இருக்கிறது.” நான்காம் தொழிற்புரட்சிக்காலத்திற்கு ஏற்ற கல்விக் கொள்கை இதுதான்” என திரு.கஸ்தூரி ரங்கன் தி இந்து நாளி தழுக்கு நேர்காணல் அளித்துள்ளார். எப்போதுமே அவ்வக் காலத்தின் ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்கேற்ற மனிதக் கூட்டங்களை உருவாக்கும் கலாச்சார நிறுவனம்தான் கல்விக்கூடம். அது மன்ன ராட்சிக் காலத்தில் ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டி  எறிந்தது. ஈன்று புறந்தருதல் தாயின்கடன், சான்றோனாக் குதல் தந்தைக்குக் கடன். வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடன் என்று கடமைகளைப் பட்டியலிட்டது. பின்னர் வந்த ஆங்கில ஆட்சியாளர்கள் மெக்காலே கல்விக் கொள்கையின் மூலம் தங்களுக்குத் தேவையான இடைத்தரகர் வேலைசெய்யும் குமாஸ்தாக்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

1947ல் ஆட்சிக்கு வந்த இந்தியப் பெரு முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் இணைந்த ஆளும் வர்க்கம் தங்கள் வர்க்க நலன்களுக்கு சேவை செய்ய ஓரளவு படிப்பறிவுள்ள உழைக்கும் கூட்டம் தேவை என முடிவு செய்தது. நவீன தொழில் வளர்ச்சியும் விவசாய உற்பத்திப் பெருக்கமும் மைய அச்சாக இருந்த 1947-64 காலகட்டம் நேருவியக் கால கட்டம். முறைசார் கல்விக்குள் மக்களைக் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்ட காலம் அது. அதன் போதாமை களைக் கணக்கில் கொண்டு இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் கோத்தாரி கமிஷன் சிபாரிசுகள் அடிப்படையில் “இந்தியக் கல்விக்கொள்கை-1968” நிறைவேற்றப்பட்டது. கணினிமயமாகிக் கொண்டிருந்த 80களில் இந்திய முத லாளிகளின் தேவைக்கேற்ற உழைக்கும் மக்களைத் தகவ மைக்க ராஜீவ்காந்தி தலைமையிலான மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை 1986ஐக் கொண்டு வந்தது. பன்னாட்டு நிறுவனங்கள் தரும் வேலை வாய்ப்பு காரண மாக அந்நிறுவனங்களின் தேவைக்கேற்ற கல்வி முறையை இந்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்க ஆரம்பித்தன. பின்னர் அதற்கேற்ற பள்ளிக்கல்வி என்கிற இடத்தை நோக்கி மொத்தக் கல்விப்பாதையும் திரும்பியது. அவசர நிலைக்குப் பிறகு கல்வியில் தனியார் மயம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் துவங்கியதும் இப்பாதை நீள ஒத்தி சைவாக இருந்தது. உயர்கல்வியில் 30 சதவீதமும், மேனி லைப்பள்ளிக் கல்வியில் 54 சதவீதமும் ஆரம்பக் கல்வியில் 22 சதவீதமும் இன்று தனியார் வசம் உள்ளன. முழுமையான தனியார்மயமாக்கலை நாடு சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இந்த எதிர்மறை அம்சங்களுக்கு அப்பாலும், எல்லோ ரும் படிக்கக்கூடாது என்றிருந்த குருகுலக்கல்வி முறை  மாற்றப்பட்டு அனைவருக்கும் கல்வி (சர்வதேச அமைப்புகள் தந்த நெருக்கடிகளும் ஒரு காரணம்) என்ற இடத்தை நோக்கி இந்தியா நகர்ந்தது. 900க்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்கள், 42000 கல்லூரிகள் 14 லட்சம் பள்ளிக்கூடங் கள் என ஒரு விரிந்து பரந்த கல்வி வலைப்பின்னலை இந்தியா இன்று பெற்றிருக்கிறது. இணையத் தொழிற்புரட்சிக்காலமாகவும் வலதுபக்க சாய்மானம் அதிகரித்துள்ள அரசியல் காலமாகவும் இருக்கும் இந்த 2019க்கான இன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் புறப்பட்டு வந்துள்ள - கஸ்தூரி ரங்கன் அறிக்கை என்ன சொல்கிறது?

பழைய குருகுல முறையைப் பல இடங்களில் போற்றிப் பாடடி கண்ணே எனப் பாடியுள்ள இவ்வறிக்கை கல்வியைப் பரவலாக்கப் புதிய ஆலோசனைகளைச் சொல்லாமல், ஏராளமான கண்காணிப்பு அமைப்புகள், எண்ணிலடங்காத் தேர்வுகள், வடிகட்டும் நிறுவனங்கள், அதிகாரக்குவிப்பு என்கிற பாதையையே முன் மொழிந்துள்ளது. இன்றைய ஆளும் வர்க்கம் படிப்பறிவில்லாத உடல்  உழைப்பாளிகளை எதிர்நோக்கி இருப்பது நமக்குப் புரிகிறது. மத்திய வாகனச் சட்டம் 1989 திருத்தப்பட இருப்பதாக வும் ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு என இருப்பதை நீக்குவதாகவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளதை இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். படிப்பறிவில்லாத மக்கள் தொகை பெருகுவதும் படித்தாலும் அறிவியல் பூர்வமாகச் சிந்திக்கும் திறன் அற்ற வர்களாக ஒரு ‘படித்த’ கூட்டத்தை உருவாக்குவதும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மட்டுமல்ல மூட நம்பிக் கையை அடித்தளமாகக் கொண்டியங்கும் மதவாத - அடிப்ப டைவாத- அரசியல் அணிதிரட்டலுக்கும் உதவியாக இருக்கும். 1947இல் 12 சதவீதமாக இருந்த கல்வியறிவு 2011ல் 79.31. ஆகவே, ஒரே இந்தியா, ஒரே கலாச்சாரம், ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு, ஒரே கல்வி என்கிற பாதையில் இன்னொரு மைல்கல்தான் இந்தக் கல்விக்கொள்கை. கஸ்தூரிரங்கன் இவ்வறிக்கையின் முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூடவே அமர்ந்து இவ்வறிக்கையின் ஒவ்வொரு பகுதியையும் ‘சீர்படுத்தியுள்ளார்.‘

பிரதமர் தலைமையிலான ராஷ்டிரிய சிக்சா ஆயோக் தான் ஒரு சூப்பர் பவர் அதிகார மையமாக நாட்டின் கல்வி யைத் தீர்மானிக்கும். மத்திய அமைப்புகள் உருவாக்கும் கல்வித்திட்டம், பாடத்திட்டம் இவற்றை அந்தந்த மாநிலத்தில் ‘மொழி மாற்றம்’ செய்வதே மாநில அரசின் கல்வித்துறை யின் பணியாகக் குறுக்கப்படும். மாநிலப் பட்டியலிலிருந்த கல்வியை காங்கிரஸ் ஆட்சியா ளர்கள் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வந்தார்கள். இப்போது இவ்வரைவறிக்கையின்படி, அது சத்தமே இல்லாமல் மத்தியப் பட்டியலுக்குப் போகிறது.  உள்ளூர் கதாநாயகர்கள் என்கிற பேரில் ஆர்எஸ்எஸ் காரர்கள் வாரத்தில் ஐந்து மணி நேரம் ஊதியத்துடன் நம் பள்ளி வகுப்பறைகளுக்குள் நுழைய ஒரு வாசலை இவ் வரைவறிக்கை திறந்து வைத்துள்ளது. அந்த வாசலில் நாமும் நுழையலாம் என்கிற வாய்ப்பு உள்ளது. தமிழ கத்தில் நாம் முண்டியடித்து அந்த இடத்தைப் பிடிக்க முயல்வோம். ஆனால் வட இந்தியா முழுவதும் அதிகாரப் பூர்வமாக - சட்டப்பூர்வமாக - அனைத்துப் பள்ளிகளிலும் சங்கிகள் நுழைவார்கள். உயர்கல்வி நிறுவனங்களின் சகல பொறுப்புகளுக்கும் அரசியல் தலையீட்டுடன் நியம னங்கள் செய்ய இவ்வரைவு வழி வகுத்துள்ளது.

ECCE (Early Child Care and Education) என்கிற யுனெஸ்கோவின் வார்த்தைகளை மட்டும் எடுத்துச் சட்டை யாக மாட்டிக் கொண்டு இவ்வறிக்கை 3,5,8 வகுப்புகளு க்குப் பொதுத்தேர்வு முறையை சிபாரிசு செய்து உண்மை யான முகத்தை மறைத்துக் கொள்கிறது. உலகில், பள்ளிக்கல்வியில் சாதனைகள் படைத்துவரும் நாடான பின்லாந்தில் 7 வயதில்தான் முறைசார் பள்ளிக் கல்வி துவங்குகிறது. அங்கேயும் கேஜி முறை இருக்கிறது. ஆனால் அது குழந்தைகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக் கும் நோக்குடன்தான் இயங்குகிறதே ஒழிய முறைசார் கல்விக்குத் ‘தயாரிக்கும்’ ஏற்பாடாக நிச்சயமாக இல்லை. ஆனால் இந்த வரைவறிக்கை 3 வயதிலிருந்தே முறைசார் கல்விக்குத் ‘தயாரிக்கும்’ எந்திரத்தில் நம் குழந்தைகளை அள்ளிப் போடுகிறது. உயர்கல்வியில் தேர்வாணையம் உள்ளிட்டு அனைத்தும் தனியார்மயம் என்பதை நோக்கிப் பாதை விரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்தியாவுக்கு என்ன மாதிரியான கல்வி வேண்டும்? இன்றைய இந்தியச் சமூகம் என்னவாக இருக்கிறதோ அதை நல்வழியில் கொண்டு செலுத்தும் கல்வி முறையே தேவை. பொருளாதார ஏற்றத்தாழ்வும் சாதிய ஒடுக்குமுறையும் பெண்கள் மீதான வன்முறைகளும் வேலையின்மையும் பிஞ்சு மனங்களில் மதவாதக் கருத்தி யல்கள் திணிப்பும் எனப் பிற்போக்கான திசையில் சென்று கொண் டிருக்கும் நம் இந்தியாவை நல்வழிப்படுதத மதச்சார்பற்ற, ஜனநாயக மாண்புகளை உள்ளடக்கமாகக் கொண்ட ஓர் அறிவியல்பூர்வமான கல்விமுறையே உடனடித் தேவை. ஆனால் தேவைகளுக்கு நேர் எதிர் திசையில் பயணிக்கக்கோரும் இந்த வரைவறிக்கை ஆபத்தானது. ஆகவேதான் இது திருத்தப்பட வேண்டியதல்ல. நிராகரிக் கப்பட வேண்டியது. 

கவிஞர் முகுந்த் நாகராஜனின் இன்னொரு கவிதை யுடன் முடிப்பது பொருத்தம்: கை விட்டுப்போன மகள் கொஞ்ச நேரம் இறங்கி நடக்க மாட்டாள், கை இரண்டையும் தூக்கி ஏந்திக் கொள்ளச் சொல்லுவாள், அப்பாவின் கையில் உட்கார்ந்து கொண்டு கழுத்தைக் கட்டிக்கொண்டு வழியில் பார்ப்பதை எல்லாம் அது என்ன, இது என்ன என்று விசாரித்துக் கொண்டு வருவாள், நடக்கும் பழக்கம் வரவில்லையே என்று அப்பாவுக்கு ஒரே கவலை. ரொம்ப யோசித்து நடக்கும்போது ‘க்கீய்...க்கீய்...’ என்று சத்தம் போடும் சின்னக் காலனிகளை வாங்கிக் கொடுத்தார். அவளுக்கு நடக்க ஆரம்பித்து விட்டாள் மகள், கிகீய் க்கீய் என்ற சத்தத்தின் கையைப்  பிடித்துக் கொண்டு உற்சாகமாக  மகள் கையை விட்டுப் போனதில் அப்பாவுக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.

இப்போதோ மகள்கள் நம் கண்முன்னால் முறைசார் கல்வி,தகுதித் தேர்வுகள் என்கிற படுகுழிகளை நோக்கி நடக்கப்போகிறார்கள். மோடி தலைமையிலான ராஷ்டிரிய சிக்சா ஆயோக் வா வா எனத் தன் கொடுங்கரம் நீட்டி அழைக்கிறது. சும்மா பார்த்திருப்போமா? மகள்களை ஓடிச் சென்று தடுப்போமா? அரக்கனை எட்டி உதைத்துத் தூரத் தள்ளுவோமா? மகள்களை இழக்கச் சம்மதிப்போமா?

;